புகைப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வினோதம்30 அடி உயர கழுமரத்தில் ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி
புகைப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது 30 அடி உயர கழுமரத்தில் ஏறி நின்று பூசாரி அருள்வாக்கு கூறினார்.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புதூர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அப்போது கோவிலின் முன்பு உள்ள 30 அடி உயரம் கொண்ட கழு மரத்தில் ஏறிய 60 வயதுடைய கோவில் பூசாரி உச்சாணியில் நின்றபடி பக்தர்களுக்கு அருள் வாக்கு சொன்னார். அதனை தொடர்ந்து அவர், கழுமரத்தில் இருந்தபடி சேவலை கடித்துக் கொண்டு மேலிருந்து கீழ்நோக்கி அம்மனுக்கு படைத்த எலுமிச்சம் பழங்களை வீசினார். இதனை குழந்தை வரம் வேண்டியும், திருமண வரம் வேண்டியும் காத்திருந்த ஏராளமான பெண்கள் மண்டியிட்டு பக்தியுடன் தங்கள் முந்தானைகளில் பிடித்தபடி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
பூசாரி வீசும் எலுமிச்சம் பழத்தை தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் அடுத்த ஆண்டிற்குள் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது இந்த கோவிலின் ஐதீகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மாலையில் தீமிதி திருவிழாவும், சாகை வார்த்தல் விழாவும் நடைபெற்றது. இதில் புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 30 அடி உயர கழுமரத்தில் ஏறி கோவில் பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.