ஓடும் பஸ்சில் தற்கொலை மிரட்டல் விடுத்து போலீஸ்காரரை தாக்கிய கைதியால் பரபரப்பு
ஓடும் பஸ்சில் தற்கொலை மிரட்டல் விடுத்து போலீஸ்காரரை தாக்கிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது
திருமங்கலம்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் செல்வகுமார் (வயது 22). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து சிவகாசி கோட்டிற்கு செல்வகுமாரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர் செய்துவிட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக அவரை மதுரைக்கு பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த போலீஸ்காரர்கள் அழைத்து வந்தனர். அவர்கள் வந்த பஸ் திருமங்கலம் அருகே வந்தபோது, போலீஸ்காரர் சரவணகுமாரிடம் கைதி செல்வகுமார் தகராறு செய்துள்ளார். அப்போது அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பஸ் படிக்கட்டுப்பகுதிக்கு சென்று பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். ஓடும் பஸ்சில் கைதி மிரட்டியதால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சமரசம் பேசி கைதியை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் அமர வைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் வந்த பஸ் திருமங்கலம் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு கைதி செல்வகுமார் போலீசாரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்பு கைதி செல்வகுமாரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று மதுரை சிறையில் அடைத்தனர்.