தனியார் நிறுவனம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


தனியார் நிறுவனம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுத்தும் கடன் பாக்கி உள்ளதாக 12 ஆண்டுகளுக்கு பின் தகவல் அனுப்பிய தனியார் நிறுவனம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவகங்கை

பணம் கொடுத்தும் கடன் பாக்கி உள்ளதாக 12 ஆண்டுகளுக்கு பின் தகவல் அனுப்பிய தனியார் நிறுவனம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இழப்பீடு

காரைக்குடி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் பீட்டர் ராஜன்(வயது 64). வக்கீலான இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கணினி ஒன்றை ரூ.23,310-க்கு தவணை முறையில் வாங்கினார். இதேபோல் 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காரைக்குடியில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் டிவி, பிரிட்ஜ் ஆகியவைகளை தவணை முறையில் வாங்கினார். இந்த 2 நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டிய தொகையை அவர் உரிய காலத்தில் செலுத்தி விட்டாராம்.

இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வக்கீல் பீட்டர் ராஜனின் இமெயிலில் அவர் 2 தவணைக்கும் தலா ரூ.999 செலுத்த வேண்டியது உள்ளது என்றும், இதனால் அவருடைய சிபில் ஸ்கோர் குறையும் என்றும் தெரிவித்துருந்தனர். தான் உரிய தொகையை கட்டிய பின்னரும் இதுபோல் இமெயில் வந்ததால் பீட்டர் ராஜன் சிவகங்கையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர், உறுப்பினர்கள், சென்னையை சேர்ந்த நிறுவனத்தினர் முறையற்ற வியாபாரம் செய்துள்ளதாகவும், எனவே வக்கீலுக்கு இமெயில் அனுப்பிய சென்னை நிறுவனத்தினர் அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பெயிண்ட்

சிவகங்கை நகர் நீதிபதி ராஜசேகரன் சாலை பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(43). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு கடையில் இருந்து ரூ.28 ஆயிரத்துக்கு பெயிண்ட் வாங்கினார். அதை ஒரு தனியார் பார்சல் லாரி சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் சிவகங்கைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர் அனுப்பிய பெயிண்ட் சிவகங்கைக்கு வந்து சேரவில்லையாம். இது குறித்து அவர் அந்த நிறுவனத்தின் மேட்டூரில் உள்ள மேலாளர், கப்பலூரில் உள்ள கிளை மேலாளர், சங்கரன்கோவில், சிவகங்கையில் உள்ள ஏஜெண்டுகள் ஆகியோரை கேட்டும் அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லையாம். இதனால் அவர் சிவகங்கையில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், நமசிவாயம் ஆகியோர் பாதிக்கப்பட்ட சுதாகருக்கு பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் மேலாளர், கிளை மேலாளர் மற்றும் 2 முகவர்கள் சேர்ந்து பெயிண்ட் கட்டணம் ரூ.28 ஆயிரம், நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story