பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதை கண்காணிக்க வேண்டும்
அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா அறிவுறுத்தி உள்ளார்.
அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா அறிவுறுத்தி உள்ளார்.
தொடக்கப்பள்ளியில் ஆய்வு
வேலூர் மாநகராட்சியில் உள்ள 48 அரசு தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் சின்னஅல்லாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா, கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டனர்.
பின்னர் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசசேகர், மாநகராட்சி நல அலுவலர் முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ஆய்வு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-
வெள்ள அபாய எச்சரிக்கை
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு சுகாதாரமாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் கூடுதல் பாத்திரம் வழங்கும்படி கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் அடிக்கடி சென்று கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து நேற்று வரை 850 முதல் 860 கனஅடி வரை உபரிநீர் வந்தது. இன்று (நேற்று) அதன் அளவு 600 முதல் 650 கனஅடியாக குறைந்துள்ளது.
கவுண்டன்ய ஆற்றுப்பாலத்தின் மேல் வெள்ளம் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த ஆற்றை ஒட்டியுள்ள கிராமப்புற மக்களுக்கு தினமும் வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. எனவே கடந்த முறை போன்று சேதம் ஏற்பட வாய்ப்பில்லை. மழை பெய்து வருவதால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கவோ, துணிதுவைக்கவோ, மீன்பிடிக்கவோ யாரும் செல்ல வேண்டாம்.
கடைக்கு சீல்
தீபாவளி பண்டிகையையொட்டி அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். மேலும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
அதேபோன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.