கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கணவாய்புதூர் ஊராட்சியில் காந்தி நகர், கே.என்.புதூர், நாராயணபுரம், கே.மோரூர், லேண்டு காலனி பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை பட்டா எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவாய்புதூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊராட்சி தலைவர் குமுதா ரத்தினம் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தங்களது நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். பிறகு சிலர் மட்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

பட்டா வழங்க வேண்டும்

இதுகுறித்து கணவாய்புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் சுமார் 150 பேருக்கு தனித்தனியாக நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் வருகிறோம். ஆனால் ஆரம்பத்தில் பட்டா வழங்கப்பட்டது. அதன்பிறகு அந்த நிலம் கூட்டுறவு நாணய சங்கத்திற்கு சொந்தமானது எனக்கூறி பட்டாவை ரத்து செய்துவிட்டார்கள். தொடர்ந்து எங்களது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சுமார் 75 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் எங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story