போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Aug 2023 1:15 AM IST (Updated: 9 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கடன் பெற்று தருவதாக பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கடன் பெற்று தருவதாக பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பண மோசடி

கோத்தகிரி அருகே கிருஷ்ணாபுதூர் பகுதி பொதுமக்கள் கடந்த 2-ந் தேதி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கிருஷ்ணாபுதூரை சேர்ந்தவர் கண்மணி. இவர் தான் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி அதே பகுதியில் உள்ள 4 மகளிர் சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் கடன் பெற்று தருவதாகவும், பின்னர் கடன் தள்ளுபடி ஆகி விடும் எனவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பெற்று உள்ளார். அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு 75 பேரிடம் லட்சக்கணக்கில் வசூலித்து விட்டு திருப்பி தராமல் மோசடி செய்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதையடுத்து அந்த மனு கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மதியம் 1 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் குணா இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது கண்மணி தனது வக்கீலுடன் வந்திருந்தார். தகவலறிந்ததும் பாதிக்கப்பட்டவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று (புதன்கிழமை) அனைவரும் ஊட்டியில் ேபாலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடக்கும் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story