சத்தியமங்கலத்தில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மர்மநபர்களால் பொதுமக்கள் அச்சம்; ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டுகோள்
சத்தியமங்கலத்தில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மர்மநபர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மர்மநபர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மர்மநபர்கள் 2 பேர்
சத்தியமங்கலம் பகுதியில் வடக்குப்பேட்டை, ரங்கசமுத்திரம், கோட்டுவீராம்பாளையம், கடைவீதி என பல்வேறு முக்கிய வீதிகள் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை நேற்று காலை அதன் உரிமையாளர்கள் ஆய்வுசெய்து பார்த்தனர்.
அப்போது கேமராவில், நேற்று முன்தினம் இரவு மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் வீதியில் மர்மநபர்கள் 2 பேர் சுற்றித் திரிந்தது பதிவாகியிருந்தது. அவர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் வேண்டுகோள்
இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கேமரா பதிவை ஆய்வு செய்தனர். மேலும் மர்மநபர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது அந்த பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட நோட்டமிட்டு வந்தார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் மர்மநபர்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சத்தியமங்கலத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று வேண்டு்கோள் விடுத்துள்ளனர்.