பொது நூலகத்தை அரசுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும்
வாடகை கட்டிடத்தில் இயங்கும் பொது நூலகத்தை அரசுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
வாடகை கட்டிடத்தில் இயங்கும் பொது நூலகத்தை அரசுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடகை கட்டிடத்தில் பொதுநூலகம்
கொள்ளிடம் கடைவீதியில் 40 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் பொது நூலகம் இயங்கி வந்தது. ஆரம்ப காலத்திலிருந்து இங்கு வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து படித்து வந்தனர். இதனால் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் மேம்பட்டது. இங்கு விலை உயர்ந்த அனைத்து தரப்பு அறிவு திறன் வாய்ந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்த கட்டிடம் பாதுகாப்பு இல்லாமலும், வாசகர்களுக்கு போதிய வசதி இல்லாமல் இருந்ததால் கொள்ளிடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்திற்கு மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நூலக கட்டிடத்திற்கு நூலகத்தை மாற்ற வேண்டும் என்று வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
வாசகர்கள், மாணவர்கள் அவதி
கடந்த (ஆகஸ்டு) மாதம் 16-ந்தேதி முதல் இந்த நூலகத்தை கொள்ளிடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் தண்ணீர்பந்தல் கிராமத்தில் உள்ள சுமார் 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பாதுகாப்பற்ற ஓட்டு கட்டிடத்தில் மாற்றி அங்கே நூலகம் இயங்கி வருகிறது. இதனால் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கொள்ளிடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நூலக கட்டிடத்துக்கு மாற்றாமல் மீண்டும் பழமையான வாடகை கட்டிடத்தில் மாற்றி அரசின் பணம் வாடகைக்காக வீணடிக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடத்திலிருந்து 3 கிலோமீட்டருக்கு அப்பால் மீண்டும் பழமையான வாடகை கட்டிடத்தில் நூலகத்தை மாற்றி இருப்பது கொள்ளிடத்தில் உள்ள வாசகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு
இது குறித்து கொள்ளிடத்தைச்சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கொள்ளிடம் கடைவீதியில் பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த நூலகத்தை அருகே உள்ள அரசுக்கு சொந்தமான, நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய புதிய கட்டிடத்துக்கு மாற்றாமல், வாசகர்கள் வந்து படிக்க இயலாத இடத்துக்கு மாற்றியுள்ளனர். இங்கு வாசகர்களும் வருவது கிடையாது, மாணவர்களும் வருவது கிடையாது. எனவே மாவட்ட நூலக அதிகாரி இதுகுறித்து நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு சொந்தமான நூலக கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நூலக அதிகாரி உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளது என்றனர்.