பெண்ணை வீடியோ எடுத்தவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
தேனி பஸ்நிலையம் பகுதியில் பெண்ணை வீடியோ எடுத்தவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
செல்போனில் வீடியோ பதிவு
பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதியினர் தேனிக்கு சுற்றுலா வந்திருந்தனர். நேற்று காலை அவர்கள் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த பெண்ணை வீடியோ எடுத்துள்ளார். ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் அவர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த அந்தப் பெண் தன் கணவரிடம் கூறினார். உடனே அவர்கள் இருவரும் வீடியோ எடுத்த அந்த நபரிடம் விசாரித்தனர்.
பின்னர் அவருடைய செல்போனில் பதிவு செய்த வீடியோவை காண்பிக்குமாறு கேட்டதற்கு அந்த நபர் அவர்களிடம் தகராறு செய்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அந்த நபர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், அதில் வீடியோ பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் தர்ம அடி
இதையடுத்து பொதுமக்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அவருடைய செல்போனையும் தரையில் வீசி எறிந்து உடைத்தனர். பின்னர் அவரை தேனி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். உடைந்த செல்போனையும் போலீசாரிடம் அவர்கள் கொடுத்தனர்.
போலீசார் விசாரித்த போது அவர், சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், மது போதையில் வீடியோ எடுத்ததாகவும் தெரிய வந்தது. அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து பெங்களூரு தம்பதியினர் புகார் கொடுக்க முன்வரவில்லை. அந்த நபரை எச்சரித்து, அறிவுரை வழங்கி அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு அந்த தம்பதியினர் சுற்றுலா சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வீடியோ பதிவு செய்யப்பட்டதா? என்பதை கண்டறிய, உடைந்த அவருடைய செல்போன் சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தேனி போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தேனியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.