அரசு பஸ் மீண்டும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
கூடலூர்-கல்பெட்டா இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் மீண்டும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர்-கல்பெட்டா இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் மீண்டும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அரசு பஸ் இயக்கம்
கேரள மாநிலம் மலப்புரம், வயநாட்டுக்கு கூடலூர் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் தினமும் சென்று திரும்புகின்றனர். இதேபோல் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரில் இருந்து கல்பெட்டாவுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கல்பெட்டாவுக்கு இயக்கப்படும் அரசு பஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 28-ந் தேதி மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்து வந்தனர். இந்தநிலையில் 1 வாரம் மட்டுமே பஸ் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக இருமாநில மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.
மீண்டும் நிறுத்தம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு மட்டுமே தற்போது பஸ் இயக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வைத்திரி பகுதிக்கு இயக்கப்பட்ட பஸ்சும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரில் இருந்து கல்பெட்டாவுக்கு பஸ் இயக்கப்பட்ட நிலையில், ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டதால், ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
இதனால் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானவர்கள் பயணம் செய்து வந்தனர். தற்போது மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, நடத்துனர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.