வீடுகளை காலி செய்ய வந்த திடீர் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

வீடுகளை காலி செய்ய வந்த திடீர் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி
x

ஏலகிரி மலையில் சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்காக அங்குள்ள வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்ட கடிதத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருப்பத்தூர்

சாகச தளம்

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. சுற்றுலா துறையின் தலமான இங்கு சுற்றுலா துறை மூலமாக பொட்டானிக்கல் கார்டன் மற்றும் சாகச விளையாட்டு தளங்கள் அமைக்கும் பணி ரூ.3 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக கடந்த நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது இந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு வேறு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் வீடுகளை காலி செய்யுமாறு அவர்களுக்கு கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடர் அமர்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனர்.

மாற்று இடம்

அதில் நாங்கள் இப்பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றோம். சாமை, கேழ்வரகு, நெல் போன்றவைகள் பயிர் செய்வதுடன், ஆடு, கறவை மாடுகள் போன்றவற்றை பராமரித்து வருகிறோம். சாகச விளையாட்டு தளம் அமைப்பதற்காக எங்களை இந்த இடத்தில் இருந்து வெள்யேறுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் இப்பகுதியை விட்டு எங்கே செல்வது என்று தெரியவில்லை.

இதுவரை தமிழக அரசு எங்களுக்கு எந்த இடம் ஒதுக்கவில்லை. எனவே படிக்கும் எங்கள் குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு அதே பகுதியில் எங்களுக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story