பாஜகவுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடு தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
இந்தியாவை ஆபத்தில் இருந்து காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளோம். மத்திய பாஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜகவுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை. பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரமே இந்த சோதனை. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறையை வைத்து சோதனை.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்.
வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை பாஜக தற்போது தமிழ்நாட்டில் பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை.
ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையினர் திமுகவின் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக அரசால் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை. தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன். நாடாளுமன்றத்தில் மக்கள் இதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். இந்தியாவை ஆபத்திலிருந்து காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என்றார்.