தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொளுத்திய வெயில்
கோடை காலம் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆன பிறகும் தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
வெயில் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் ஏரிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது. இதனால் மானாவாரி விவசாய சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்் மழை பெய்தது. தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக தர்மபுரியில் 25 மி.மீ. மழை பதிவானது. தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பென்னாகரம்-9, அரூர்-5, ஒகேனக்கல்-5, பாலக்கோடு-22.4 மாவட்டம் முழுவதும் சராசரியாக 7.38 மி.மீ. மழை பதிவானது.
இந்த மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வழக்கத்தை விட குறைந்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.