இரட்டை பெண் சிசுக்கள் இறப்புக்கு தாய்ப்பால் புகட்டாமல் வசம்பு கொடுத்ததே காரணம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விளக்கம்


இரட்டை பெண் சிசுக்கள் இறப்புக்கு தாய்ப்பால் புகட்டாமல் வசம்பு கொடுத்ததே காரணம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விளக்கம்
x

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரட்டை பெண் சிசுக்கள் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அடுத்தடுத்து இறந்ததால் சோகம் ஏற்பட்டது. தாய்ப்பால் புகட்டாமல் மாட்டுப்பால், வசம்பு கொடுத்ததே இதற்கு காரணம் என டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்துர்

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரட்டை பெண் சிசுக்கள் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அடுத்தடுத்து இறந்ததால் சோகம் ஏற்பட்டது. தாய்ப்பால் புகட்டாமல் மாட்டுப்பால், வசம்பு கொடுத்ததே இதற்கு காரணம் என டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

இரட்டை பெண் குழந்தைகள்

திருப்பத்தூர் அருகே செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 28). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புவனேஸ்வரிக்கு ஒரு மாதத்துக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதால் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

அந்த குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், ஒரு மாதமாவது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டுமென டாக்டர்கள் கூறினர். ஒரு மாதம் முடிந்ததும் பெற்றோரிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டனர். வீடு திரும்பிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 குழந்தைகளுக்கும் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தை 3 நாட்களுக்கு முன்பும், மற்றொரு குழந்தை 2 நாட்களுக்கு முன்பும் அடுத்தடுத்து இறந்தன. 2 சிசுக்கள் அடுத்தடுத்து இறந்ததால் பெற்றோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கதறி துடித்தனர். இதனால் சோகம் ஏற்பட்டது.

அப்போது கூலி வேலை செய்து வரும் எங்களால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற முடியாத காரணத்தினால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தோம். ஆனால் எங்கள் குழந்தைகள் இறந்து விட்டது. மருந்து பற்றாக்குறை இருக்கலாம் என கூறினர்.

டாக்டர் தகவல்

இதுகுறித்து திருப்பத்தூர் தலைமை மருத்துவ அலுவலர் கே.டி.சிவக்குமார் கூறுகையில், ''அருண்- புவனேஸ்வரி தம்பதியர்களுக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 900 கிராம், மற்றொரு குழந்தை ஒரு கிலோ 500 கிராம் எடையில் இறந்தது. இதன் காரணமாக டாக்டர்கள் ஆலோசனைப்படி பிறந்த இரட்டை குழந்தைகளை ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையில் முன்னேற்றம் காணப்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன் குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன் குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். நல்ல நிலையில் காப்பாற்றிக் கொடுத்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அறிவுரைப்படி தாய்ப்பால் கொடுக்காமல் பசுவின் பால் மற்றும் வசம்பு கொடுத்துள்ளனர். இதனால் ஆபத்தான நிலை ஏற்பட்டு குழந்தைகளை சிகிச்சைக்கு கொண்டுவந்தனர்.இந்த நிலையில்தன் 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தன'' என்றார்.

3 பிரசவத்திலும் குழந்தைகள் இறந்த பரிதாபம்

புவனேஸ்வரிக்கு 3-வது பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் இறந்தன. இதுபோன்று முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் ஒரு குழந்தை என பிறந்த நிலையில் அவையும் எடை குறைவு காரணமாக இறந்து விட்டதாக டாக்டர் சிவகுமார் கூறினார்.


Next Story