இணையத்தில் வெளியான அமைச்சர் கே.என்.நேரு பேசியதாக வந்த பதிவு எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி -அமைச்சர் பேட்டி


இணையத்தில் வெளியான அமைச்சர் கே.என்.நேரு பேசியதாக வந்த பதிவு எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி -அமைச்சர் பேட்டி
x

அமைச்சர் கே.என்.நேரு பேசியதாக இணையத்தில் வெளியான பதிவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மாநகராட்சியின் 5 வார்டுகளில் அமைச்சர் எ.வ.வேலு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 20-வது வார்டு பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடிகளுக்கான தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர் பொதுமக்களிடம் கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

நான் 3 நாட்களுக்கும் மேலாக ஈரோட்டில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறேன். மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை காணமுடிகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 1½ ஆண்டுகளில் கொண்டு வந்து நிறைவேற்றி வரும் திட்டங்களால் மக்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது.

குறிப்பாக பெண்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அரசியல் சூழ்ச்சி

அமைச்சர் கே.என்.நேரு பேசியதாக ஒரு வீடியோ மற்றும் குரல் பதிவு இணையத்தில் வெளியாகி உள்ளது. தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேருவும், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசிக்கொண்டு இருந்த காட்சி உள்ளது. அவர்கள் ஈரோட்டில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வரும் தலைவர்கள், அவர்களுக்கு தங்கும் விடுதி வசதி செய்வது உள்ளிட்ட விவரங்களைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். அந்த கூட்டத்தில் நான் உள்பட பலரும் இருந்தோம். அவர்கள் தவறாக எதுவும் பேசவில்லை.

ஆனால் ஏதோ ஒரு விஷமி, பணத்தை பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததாக சமூக ஊடகங்களில் பதிவு செய்து இருக்கிறார். நானும் அந்த பதிவினை பார்த்தேன். அதில் கேட்கும் குரல் வார்த்தைகளுக்கும், அச்சிடப்பட்டு ஓடும் விஷயத்துக்கும் தொடர்பு இருக்காது. இது விஷமிகளின் பிரசாரம். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி. அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சுக்கும் இந்த வீடியோவுக்கும் சம்பந்தம் இல்லை. அது மார்பிங் செய்யப்பட்ட பதிவாக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.


Next Story