பாதிக்கப்பட்டவருக்கு சார்பதிவாளர் ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்


பாதிக்கப்பட்டவருக்கு சார்பதிவாளர் ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
x

பெரம்பலூரில் பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

பத்திரப்பதிவு செய்ய மறுப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். விவசாயி. இவரது மகன் பச்சமுத்து(வயது40). பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே பச்சமுத்து, மக்காச்சோளம், பருத்தி கொள்முதல் செய்து விற்பனை செய்யும் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அந்தூரை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு சொந்தமான வீட்டுமனையை கிரையம் செய்யும் வகையில் ஒரு லட்ச ரூபாய் முன்பணத்தை ரகுபதியிடம் பச்சமுத்து கொடுத்திருந்தார். பின்பு அந்த வீட்டுமனையை வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்பொருட்டு, உரிய பதிவு கட்டணத்திற்குரிய வரைவோலை, பதிவு செய்வதற்கான தட்டச்சுசெய்யப்பட்ட கிரைய பத்திர ஆவணம் ஆகியவற்றை வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

ஆனால் ரகுபதி பெயரிலான சொத்தை அவரது சகோதரி அமுதா என்பவரது பெயரில் அடமானம் எழுதி வைத்துள்ளதாக கூறி சார்பதிவாளர் அந்த அடமானத்தை பைசல் செய்துவிட்டு பின்பு கிைரயப்பத்திரப்பதிவிற்கு வருமாறு கூறினார். இதனிடையே சொத்தின் மீதான அடமான தொகையை தான் பைசல் செய்துவிடுவதாககூறி பச்சமுத்து அதற்கான உறுதிமொழி ஆவணத்தையும் சார்பதிவாளரிடம் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு

இதனை ஏற்க மறுத்த சார்பதிவாளர் இரவு 9 மணி கடந்தும், கிைரய பத்திரத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டார். பதிவு செய்வதற்காக வாங்கிய பத்திரம் வீணாகியது. இதனிடையே ரகுபதி இறந்துவிட்டார். இதனால் பச்சமுத்து தனது ரூ.ஒரு லட்சத்தை இழந்த நிலையிலும், சொத்து ஆவணத்தை பதிவு செய்யமுடியாமலும் மனஉளைச்சலுக்கு ஆளானார். பதிவு செய்வதற்கான உரிய ஆவணங்கள் சரியாக இருந்தும், அதனை பதிவு செய்யாமல் தவிர்த்துவிட்ட வேப்பூர் சார்பதிவாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பதிவாளரிடம் உரிய நஷ்டஈடுகேட்டு, பச்சமுத்து தனது வக்கீல் சீனிவாசமூர்த்தி மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரருக்கு சேவை குறைபாடு, அவருக்கு மனஉளைச்சலுக்காக நிவாரணமாக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வேப்பூர் சார்பதிவாளர் வழங்கவேண்டும் என்றும், 2-வது எதிர்மனுதாரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.


Next Story