ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2023 7:45 PM GMT (Updated: 6 Feb 2023 7:46 PM GMT)
சேலம்

சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் புரோக்கரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பத்திரப்பதிவுக்கு மனு

சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். வீரபாண்டி அடுத்த கொழிஞ்சிப்பாடி பகுதியில் தனது தாயார் பெயரில் உள்ள 17 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு முடிவு செய்தார்.

இதற்காக அவர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தார். அதன்பேரில் தாதகாப்பட்டி சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் கொண்டலாம்பட்டியை சேர்ந்த புரோக்கர் கண்ணன் ஆகியோர் பழனிவேலின் தாயாருக்கு சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டனர். ஆனால் அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

இதைத்தொடர்ந்து பழனிவேலை, புரோக்கர் கண்ணன் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத பழனிவேல், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பழனிவேலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அதை சார்பதிவாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் நேற்று மதியம் உடையாப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது புரோக்கர் கண்ணனிடம், பழனிவேல் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.

சார்பதிவாளர் கைது

பிறகு அவர் அந்த பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுக்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சுற்றிவளைத்து இருவரையும் பிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை லஞ்சஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story