மாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்


மாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
x

மாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் ஸ்ரீதலசயன பெருமாள் திருக்கோவில் 14-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

இந்த கோவிலுக்கு சொந்தமாக பழமையான கங்கை கொண்டான் மண்டபம் உள்ளது.

இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம், பூதத்தாழ்வார் அவதார உற்சவங்களில் இந்த மண்டபத்தில் தலா 10 நாட்கள் சாமிக்கு மண்டகப்படி உற்சவம் நடக்கும். பிரதான சாலைகள் சந்திப்பு பகுதியில் உள்ள மண்டபம், வாகன போக்குவரத்து அதிர்வுகள் உள்ளிட்டவற்றால் சிதிலமடைந்து காணப்படுகிறது.

மண்டபத்தின் முகப்பு, தென்மேற்கு மூலை மேற்தளகற்கள் போன்றவை பெயர்ந்து கீழே விழுந்தன. அதனால், மண்டபமே சரியும் ஆபத்து ஏற்பட்டது. தற்காலிகமாக, மேல்தளத்தை தாங்கும் வகையில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டன.

இதனால் மேல்தளத்தை முழுமையாக அகற்றி, புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி இந்து சமய அறநிலையத் துறையிடம் பொதுமக்கள் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது தலசயன பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் கங்கை கொண்டான் மண்டபத்தையும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மண்டபத்தை புதுப்பிப்பதற்காக கிரேன் உதவியுடன் தளத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட இடத்தில் உள்ள கற்களை பிரித்து அகற்றி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.


Next Story