விருத்தாசலம் பகுதி மக்களை கதிகலங்க வைக்கும் கொள்ளையர்கள்


விருத்தாசலம் பகுதி மக்களை கதிகலங்க வைக்கும் கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:45 PM GMT)

2 மாதத்தில் 19 திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் மூலம் விருத்தாசலம் பகுதியில் பொதுமக்கள் கொள்ளையர்கள் கதிகலங்க வைத்து வருகின்றனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று விருத்தாசலம். இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தை கொண்டுள்ள விருத்தாசலத்தின் நிலை இரவு நேரத்தில் தலைகீழாக மாறிவிடுகிறது.

கதிகலங்கும் மக்கள்

ஆம், இரவில் வீட்டில் நகை, பணத்துடன் தூங்கும் மக்களுக்கு மறுநாள் அது பாதுகாப்பாக இருப்பதே கேள்விக்குறியாக தான் உள்ளது. அந்த அளவிற்கு கொள்ளையர்கள் தங்கள் சதிதிட்டத்தை விருத்தாசலம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரங்கேற்றுகின்றனர். மேலும் பகலில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து மர்மநபர்கள் வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர். ஏன், நெல் மூட்டைகள், கால்நடைகளை கூட கொள்ளையர்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் விருத்தாசலம் பகுதி மக்கள் கதிகலங்கி போய் தான், ஒவ்வொரு பொழுதையும் கழிக்கின்றனர்.

முதியவர்களுக்கு எதிரான குற்றங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் சிறு குற்றங்கள், பாலியல் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க பெரும்பாலும் முன்வந்ததில்லை. ஆனால் தற்போது பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்துக்கு நீதி தேடி போலீஸ் நிலையங்களுக்கு வருகின்றனர்.

20 வயதுக்கு குறைவானவர்கள்

அதே சமயத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற தடுக்கக்கூடிய குற்றங்களும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் 50 சதவீதம் பேர் 20 வயதுக்கு குறைவானவர்களே. அதற்கு சான்றாக விருத்தாசலம் பகுதியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 19 வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது சராசரியாக 3 நாளைக்கு ஒரு திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. மேலும் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

* கடந்த மார்ச் 17-ந் தேதி விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பத்தில் உள்ள அங்காளம்மன் மற்றும் வீரனார் கோவில்களில் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலியையும், உண்டியலையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

* மார்ச் 20-ந் தேதி ஊமங்கலத்தை சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்டு வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, 23½ பவுன் நகைகள், 150 கிராம் வெள்ளி விளக்கு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிச்சென்றனர்.

* விருத்தாசலம் செல்வராஜ் நகரில் உள்ள மாரியம்மன் மற்றும் நாகாத்தம்மன் கோவிலில் மார்ச் 21-ந் தேதி உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* பெண்ணாடம் இறையூரை சேர்ந்த நித்யா (வயது 37) என்பவர் கடந்த மார்ச் 25-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது, மர்மநபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

* விருத்தாசலம் துர்கை நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 1-ந் தேதி 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.

* கம்மாபுரம் அருகே ஊ.ஆதனூரை சேர்ந்த செந்தில்குமார் (45) வீட்டில் கடந்த மாதம் 10-ந் தேதி சுமார் 450 கிலோ எடை கொண்ட பித்தளை பாத்திரங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

* இதேபோல் பெண்ணாடம் மன்னார் நகரை சேர்ந்த தவமணியிடம் (70) மர்மநபர்கள் போலீஸ் போல் நடித்து நூதன முறையில் 4 பவுன் செயினை அபேஸ் செய்து சென்றனர்.

* பெண்ணாடம் அடுத்த சவுந்தரசோழபுரம் ஊராட்சி செம்பேரி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் ஏப்ரல் 14-ந் தேதி இரண்டு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

* விருத்தாசலம் அடுத்த ஆலடி குருவங்குப்பத்தில்காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதில் சிறுவன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.

* விருத்தாசலம் அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மனைவி வித்யா கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, மர்மநபர்கள் 3 பேர் வித்யாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில் ஒருவன் மட்டும் பிடிபட்டுள்ளான்.

* கடந்த மாதம் 23-ந் தேதி விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த சண்முகம் மனைவி அமுதா தனது மகன் சக்திவேலுடன் சத்தியவாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிய போது, மர்மநபர்கள் 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.

* பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த தனபால் (54) என்பவர் வளர்த்து வந்த 3 ஆடுகளை மர்மநபர்கள் கடந்த மாதம் 27-ந் தேதி தூக்கிச் சென்றனர்.

நெல் மூட்டைகளையும் விட்டுவைக்காத...

* பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (48) தனது நிலத்தில் அறுவடை செய்து, நேரடி கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த 24 நெல் மூட்டைகளையும் கடந்த 27-ந் தேதி மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

* கடந்த மாதம் 27-ந் தேதி இரவு பெண்ணாடம் அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் ரொக்கத்தையும், 4 பவுன் நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

* அரியலூர் மாவட்டம் கயர்லாபாத்தை சேர்ந்த அறிவுகண்ணு (60), கடந்த 29-ந் தேதி விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு வந்து, நெய்வேலி செல்லும் பஸ் ஒன்றில் ஏறினார். அப்போது அவரது மணி பர்சில் வைத்திருந்த 9 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

* விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரது விவசாய நிலத்தில் ஆழ்துளை மின் மோட்டாரில் இருந்த மின் கேபிளை கடந்த 2-ந் தேதி மர்மநபர் திருடியுள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

* கடந்த 6-ந் தேதி விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் உள்ள ஒரு ஷோரூமில் இருந்த 1 லட்சத்தி 29 ஆயிரம் ரூபாய் திருடுபோனது.

* பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் சாமியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் சிறிய அளவிலான உண்டியலை கொள்ளையடித்து சென்றனர்.

* விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் (வயது 61) வீட்டில் கடந்த 13-ந் தேதி 11 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

* விருத்தாசலம் மணலூரை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது 27) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் ரூ.15 ஆயிரம் மற்றும் இரண்டு ஏ.டி.எம். கார்டுகள், ஆதார் கார்டு ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

2 கொலைகள்

* இதேபோல் விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அறிவு என்ற அறிவழகன் (45) கடந்த மாதம் 29-ந் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

* விருத்தாசலம் மணலூர் காலனியை சேர்ந்த விஜய் கடந்த மாதம் 9-ந் தேதி 17 வயது சிறுவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கைதான சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது.

* மேலும் கடந்த மாதம் 1-ந் தேதி விருத்தாசலம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த இளைஞர்கள் 2 பேர், பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை கேட்டு போலீஸ்காரர்கள் 2 பேரை தாக்கியுள்ளனர்.

இந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஒரு சில வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். பல வழக்குகளில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இதில் பல வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத போலீசார், தற்போது பிற வழக்குகளில் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். அதனால் தான் என்னவோ வழிப்பறி கொள்ளையர்கள் நாம் போலீசில் சிக்க மாட்டோம் என்ற எண்ணத்திலே தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் விருத்தாசலம் நகரில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story