ரெயில் நிலையத்தின் மேற்கூரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது
ரெயில் நிலையத்தின் மேற்கூரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது
தஞ்சையில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்தது. இந்த நிலையில் ரெயில் நிலையத்தின் மேற்கூரை நேற்று மீண்டும் பெயர்ந்து விழுந்தது.
தொடர்ந்து 2-வது நாளாக மழை
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது.
அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. நேற்று காலை வெயில் மந்த நிலையில் காணப்பட்டது. மதியத்துக்குப்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து மழைபெய்து கொண்டே இருந்தது. மேலும் விட்டு, விட்டு, மழை பெய்த வண்ணம் இருந்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.இந்த மழை மாலை வரை நீடித்தது. மேலும் தாழ்வான பகுகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பினர்.
மேற்கூரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது
தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் நுழைவு பகுதியில் மேற்கூரை நேற்று மதியம் மழை பெய்த போது மீண்டும் பெயர்ந்து விழுந்தது. அப்போது அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சிமெண்டு காரையை மறைத்து அட்டைகளை கொண்டு மாடலாக வடிமைக்கப்பட்டு இருந்த இந்த மேற்கூரை நேற்று முன்தினம் பெயர்ந்து விழுந்த நிலையில் நேற்றும் மீண்டும் விழுந்ததால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது
மழையின் போது தஞ்சை கொண்டிராஜபாளையம் ஜாமேராவ்சந்து பகுதியில் கூலி தொழிலாளியான வீரமணி என்பவரின் ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. வீட்டின் முன்பகுதி மற்றும் பூஜை அறை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.