ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை தொடங்கியது


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை தொடங்கியது
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை தொடங்கியது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பை அடுத்த மிராளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் முதன்முறையாக நடைபெற்றது. உழவர் மன்ற தலைவர் அகர ஆலம்பாடி வேல்முருகன் ஏலத்தை தொடங்கி வைத்தார். இதில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தனலட்சுமி, மேற்பார்வையாளர் பிரபாகரன், இளநிலை உதவியாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தில் காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, சிதம்பரம், மற்றும் தீர்த்தம் பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை சீர்காழி, கும்பகோணம், விழுப்புரம் மற்றும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தேசிய வேளாண் சந்தையில் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு கொள்முதல் செய்தனர். பருத்தி குவிண்டாலுக்கு அதிக பட்சமாக ரூ.7,342-க்கும், சராசரியாக ரூ.6,500-க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்கி வருவதால் நெல், உளுந்து, பச்சைப்பயிறு, எள், மணிலா, தேங்காய் பருப்பு மற்றும் அனைத்து விளை பொருட்களும் அனைத்து பணி நாட்களிலும் தேசிய வேளாண் சந்தையில் மறைமுக ஏலம் நடைபெறும் எனவும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் பருத்தி ஏலம் நடைபெறும் எனவும், இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story