பள்ளி மாணவர்கள், கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த கொடூரம் - நண்பனிடமே தங்க சங்கிலி பறிப்பு
பள்ளி மாணவர்கள், கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து நண்பனிடமே தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது அம்பலமானது.
சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குள் செயல்படும், தனியார் பள்ளி மாணவனிடம் 2 கொள்ளையர்கள் சேர்ந்து, தங்க சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சங்கிலியை பறிகொடுத்த மாணவன் கொடுத்த புகார் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மாணவனிடம் தங்க சங்கிலி பறித்த 2 கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். அவர்களது பெயர் அர்ஷத், அரிஹரசுதன் என்பதாகும். அவர்கள் மீது ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நகையை பறிகொடுத்த மாணவன் படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவர் கூறியதன் பேரில்தான் மேற்படி நகை பறிப்பில் கொள்ளையர்கள் ஈடுபட்டது அம்பலமானது. மாணவனின் நண்பர்களான இருவரும் கைது செய்யப்பட்டனர்.