பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
குருபூஜை விழா
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் 27-ந் தேதி தமிழக அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி, 28-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் நிகழ்வு, 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெறும். குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், சசிகலா, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தலைமை செயலாளர் துரை வைகோ மற்றும் நாம் தமிழர், தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜனதா, கம்யூனிஸ்டு, பா.ம.க. உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய முக்கிய பிரபலங்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
ஐ.ஜி. ஆய்வு
இதற்காக பார்த்திபனூரிலிருந்து பசும்பொன் வரையிலும், அருப்புக்கோட்டை சாலையில் இருந்து பசும்பொன் வரையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு நடந்து வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குருபூஜை விழாவில் தேவர் பக்தர்கள் லட்சகணக்கானோர் வருவார்கள் என்பதால் இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை தென் மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயர் ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி அவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம், வீடு, பூஜை அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும் பொதுமக்களில் வந்து செல்லும் வழித்தடம், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழித்தடம், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
சுவர் விளம்பரங்கள்
முன்னதான தென் மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேலு, பழனி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவண பாண்டியன், கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் குருநாதன், பசும்பொன் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றேனர்.
குருபூஜையை முன்னிட்டு விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்பதால் அரசியல் கட்சி கட்சியினர் தங்கள் தலைவர்களை வரவேற்று பார்த்திபனூரில் இருந்து பசும்பொன் வரையிலும், அருப்புக்கோட்டை விளக்கிலிருந்து பசும்பொன் வரையிலும் சுவர் விளம்பரங்களை போட்டி போட்டு செய்து வருகின்றனர்.