டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து முற்றுகை
மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையை கண்டித்து, மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையை கண்டித்து, மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
மதுரையில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில், டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், ரெயில்வே பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையே, ரெயில்வே ஆஸ்பத்திரியில் டாக்டர்களை பணி நியமனம் செய்ய வலியுறுத்தி முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் கோட்ட இணை செயலாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார்.
கோட்ட பொருளாளர் சரவணன், அகில இந்திய கார்டுகள் சங்கத்தின் கோட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில், உதவி கோட்டத்தலைவர் ஜெயராஜ சேகரன் நன்றி கூறினார். முன்னதாக, முதன்மை மருத்துவ கண்காணிப்பாளரை சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
டாக்டர்கள் பற்றாக்குறை
அந்த மனுவில், மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் மூத்த டாக்டர்கள் விருப்ப ஓய்வு பெற்று வேலையை விட்டு சென்று விட்டனர். அவர்களுக்கு பதிலாக இதுவரை டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. மதுரை கோட்டத்தில், பழனி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் தூத்துக்குடியில் உள்ள ரெயில்வே கிளினிக்குகள் டாக்டர்கள் இல்லாமல் செயல்படுகிறன. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்னர் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்ட போது, மேல்படிப்புக்காக சென்று வந்த டாக்டர்கள் விரைவில் மீண்டும் மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் பணியில் சேர உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், அவர்கள் 2 பேரும் திருவனந்தபுரம் மற்றும் அரக்கோணம் ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மதுரையில் உள்ள ரெயில்வே பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஓய்வூதியர்கள் ஆகியோர் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.. எனவே, போர்க்கால அடிப்படையில் ரெயில்வே ஆஸ்பத்திரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.