பணிமுடியாமல் பாழ்பட்டுபோகுது 'ஸ்மார்ட் சிட்டி' குளம்...
பணிமுடியாமல் பாழ்பட்டுபோகுது ‘ஸ்மார்ட் சிட்டி’ குளம்...
கோவை
செல்வ சிந்தாமணி குளத்தில் இன்னும் ஸ்மார்ட்டி சிட்டி பணிமுடியாமல் உள்ளதால் பாழ்பட்டுபோகும் நிலை உள்ளது. ஆகவே பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
செல்வசிந்தாமணி குளம்
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் ஆகிய குளங்களின் கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளத்தில் பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது.
மற்ற குளங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் செல்வ சிந்தாமணி குளத்தில் ரூ.30 கோடியில் குளக்கரையை பலப்படுத்தி அவற்றை அழகு படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் சில பணிகள் மட்டுமே செய்ய வேண்டும்.
புதர்கள் ஆக்கிரமிப்பு
ஆனால் அதற்குள் அங்கு வைக்கப்பட்டு உள்ள இருக்கைகள், நடைபாதையில் பதிக்கப்பட்டு உள்ள டைல்ஸ்கள் ஆகியவை உடைந்து தகர்ந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. மேலும் கரையை பலப்படுத்தி அங்கு வைக்கப்பட்டு உள்ள அழகு செடிகளின் நடுவில் புதர்கள் வளர்ந்து அவற்றை ஆக்கிரமித்து உள்ளன.
இதன் காரணமாக கொடிய விஷம் கொண்ட பாம்புகள் நடமாடும் இடமாக இந்த குளம் தற்போது மாறி வருகிறது. இத ஒருபுறம் இருக்க குளத்தின் முன்புறம் இரும்பு கேட்டுகள் போடப்பட்டு உள்ளன. அந்த கேட்டுகளும் உடைந்து விட்டன. இதனால் அங்கு கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன.
சமூக விரோத செயல்கள்
மேலும் சாலை ஓரத்தில் இந்த குளம் இருப்பதால், இரவு நேரத்தில் குளக்கரையை ஒட்டி சிலர் தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்து உள்ளது.
இதற்காகதான் இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இந்த குளம் சீரமைக்கப்பட்டதா? என்று கேட்கும் நிலையில்தான் தற்போது இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை முறையாக சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். செல்வ சிந்தாமணி குளத்தில் இன்னும் ஸ்மார்ட்டி சிட்டி பணிமுடியாமல் உள்ளதால் பாழ்பட்டுபோகும் நிலை உள்ளது. இதற்கு நடவடிக்கை எப்போது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பாம்புகளின் நடமாட்டம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த குளத்தை தேர்வு அதில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. அதை பார்க்கும்போது அழகாகதான் இருக்கிறது. ஆனால் அங்கு உள்பகுதியில் எவ்வித பராமரிப்பும் இல்லாததால் இருக்கைக்காக போடப்பட்ட இரும்பு கம்பிகள், பார்வையாளர்களின் மாடம் ஆகியவை துருபிடித்து எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய நிலையில்தான் இருக்கிறது.
மேலும் கரை முழுவதும் புதர்மண்டி கிடப்பதால் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகி பாம்புகளின் புகலிடமாக மாறிவிட்டது. பாம்புகளுக்காகதான் இந்த குளம் சீரமைக்கப்பட்டதா என்று கேட்கும் நிலையில் இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.