வடமாநில தொழிலாளி மீது மண் சரிந்தது


வடமாநில தொழிலாளி மீது மண் சரிந்தது
x

கோபி அருகே பாலம் கட்டும் பணியின்போது வடமாநில தொழிலாளி மீது மண் சரிந்து விழுந்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கோபியை அடுத்த டி.ஜி.புதூர் நால்ரோடு அருகே உள்ள காலனி பகுதியில் தரைப்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை வழக்கம்போல் பாலம் கட்டும் பணி நடைபெற்றது. அப்போது பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் இரும்பு தகரம் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விகாஷ் மார்க்கி (வயது 19) என்பவர் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த குழிக்குள் விகாஷ் மார்க்கி தவறி விழுந்தார். இதில் அவர் மீது மண் சரிந்து மூடியது. இதனால் பதற்றம் அடைந்த மற்ற வடமாநில தொழிலாளர்கள் உடனே அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விகாஷ் மார்க்கியை உயிருடன் மீட்டனர். அப்போது அவர் காயம் அடைந்து இருந்ததுடன், மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story