கற்சிலை என புதுப்பித்தபோது வெண்கலம் என தெரியவந்த வாஞ்சிநாதன் சிலை
செங்கோட்டையில் வாஞ்சிநாதனின் சிலையை கற்சிலை என்று கருதி புதுப்பித்தபோது, அது வெண்கல சிலை என தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அந்த சிலையை வியப்புடன் பார்த்து சென்றனர்.
செங்கோட்டை:
சுதந்திர போராட்டத்தில் வீர மரணம் அடைந்த வாஞ்சிநாதனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் அவரது முழு உருவச்சிலை கடந்த 17-6-1986 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டில் அமைக்கப்பட்டது. சுமார் 36 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிலையை செங்கோட்டை நகரசபை தலைவர் ராமலட்சுமி தனது சொந்த செலவில் புதுப்பிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி, கற்சிலை என நினைத்து சிலைக்கு வெண்கல நிற பெயிண்ட் பூசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக நேற்று காலையில் சிலையை சுற்றிலும் தென்னந்தட்டிகளால் அடைத்து வைத்து சிலையை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து வெண்கல நிற பெயிண்ட் பூசுவதற்காக, சிலையின் மீதுள்ள கருப்பு நிற பெயிண்டை சுரண்டி அகற்றினர். அப்போது அந்த சிலையானது வெண்கலத்தாலான சிலை என தெரியவந்தது.
செங்கோட்டை நகரின் நடுவில் கருப்பு நிறத்தில் அமைந்திருந்த வாஞ்சிநாதன் சிலையானது கற்சிலை என்றே இதுவரையிலும் அனைவரும் கருதினர். இந்த நிலையில் அது வெண்கல சிலை என்பதை அறிந்ததால் பலரும் அதனை வியப்புடன் பார்த்து சென்றனர். வாஞ்சிநாதன் வெண்கல சிலையை புதுப்பித்து விரைவில் திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.