உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குடியேறும் போராட்டம்


உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2023 7:00 PM GMT (Updated: 5 Jan 2023 7:11 AM GMT)

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குடியேறும் போராட்டம் நடத்தினா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடுகபாளையம், கூத்தனூர், பல்லவாடி, கொம்மசமுத்திரம் ஆகிய கிராமங்களில் நத்தம் புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரகுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராடடத்தில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அதை ஏற்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா அலுவலக வாயிலில் பந்தல் அமைத்து சமையல் செய்து அங்கேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறுதலாக வழங்கிய பட்டாக்களை திருத்தம் செய்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து தாசில்தார் மணிமேகலை அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story