மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி-அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு நடந்த மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு நடந்த மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
கண்காட்சி
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு துறை அமைச்சர் கண்காட்சியை பெரியகருப்பன் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட மாடலுக்கு அடித்தளமாக திகழ்ந்து வரும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1967-ல் சட்டமன்ற பேரவையில் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, நமது தமிழினத்தை பெருமைப்படுத்திய தலைவராவார். அதன்படி, தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.7.1967-ம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு நாளாக சிறப்பாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
அதனடிப்படையில் சிறப்பு கண்காட்சி மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெறுகிறது.
பரத நாட்டியம்
இதில் தமிழர்களின் வீர விளையாட்டுகளை போற்றிடும் வகையில் மாணவர்களின் சிலம்பாட்டங்கள், தமிழின் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில் மாணவிகளின் பரதநாட்டியம், மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புக்களில் திறன்மிகு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று தமிழின் பெருமையையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்களின் பெருமையையும், பண்டைய காலத்தில் நகர நாகரிகங்களுடன் வாழ்ந்து வந்த நமது தமிழர்களின் புகழினை இன்றைய இளைய தலைமுறையினர்களும் மற்றும் எதிர்கால சந்ததியினர்களும் அறிந்து கொள்கின்ற வகையில், சிறப்பான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருவதற்கு இதுவே சான்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
இதைதொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.