மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது
வால்பாறையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. இங்கு காய்கறிகளால் உருவான அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
வால்பாறை
வால்பாறையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. இங்கு காய்கறிகளால் உருவான அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
5 ஆண்டுகளுக்கு பிறகு...
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக, மலைப்பிரதேசமான வால்பாறை விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரிக்கிறது. அந்த சமயத்தில் அவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கோடை விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு மீண்டும் வால்பாறையில் கோடை விழா நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று கோடை விழா நடத்த கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
கோடை விழா
இந்த நிலையில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மலர் கண்காட்சியுடன் நேற்று கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா கோைட விழாவின் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடக்க விழாவிற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையாளர்(பொறுப்பு) வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வால்பாறை தாசில்தார் அருள்முருகன் வரவேற்றார்.
தொடர்ந்து பரத நாட்டியம், யோகா, நடனம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மலர் அலங்காரங்கள்
கோடை விழாவைெயாட்டி அனைத்து துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஜெர்பரா, ரோஜா, டென்ரோபியம், புளு டெய்சி, வெள்ளை டெய்சி, ஜிப்போஸ்பிலா, ஏஸ்பரகஸ், கார்னேசன் உள்பட 6,500 மலர்களால் செல்பி ஸ்பார்ட், வண்ணத்துப்பூச்சி, மிக்கி மவுஸ் போன்ற அலங்காரங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இது தவிர 250 கிலோ காய்கறிகளை கொண்டு வரையாடு, கோடை விழா சின்னமாக விளங்கும் இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.
இன்றும் நடக்கிறது
இதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களும் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
இன்று(சனிக்கிழமை) கோடை விழாவின் 2-வது நாள் நிகழ்ச்சிகளாக மேஜிக் ஷோ, இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி தலைவர், துணை தலைவர், ஆணையாளர், கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.