கர்நாடக அரசின் மனுவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்
காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்யும் என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிக்கல்கள் ஏற்படும்
ஆண்டு தோறும் நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழா இந்த ஆண்டு வேலூரில் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தி.மு.க., தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரும் பட்சத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்படும். இது போன்ற ஒரு சட்டத்தை எப்போது கொண்டு வருவார்கள் என்பது தெரியாது. அதற்கான கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
மேல்முறையீடு செய்யும்
காவிரியில் 5 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது. அதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசும் மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக வரும் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிறது. பா.ஜ.க. அரசு தி.மு.க.வை பல்வேறு நிலைகளில் எதிர்த்து வருகிறது. அதைப்பற்றி தி.மு.க. கவலைப்படாது. தமிழகத்தில் சாலைகள் புனரமைக்கப்படாமல் சேதமடைந்து இருப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் தான் தற்பொழுது மோசமான நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.