காதலியின் கண்முன்னே வாலிபர் வெட்டி படுகொலை
கோவையில் நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட வருமாறு குடிபோதை யில் தொந்தரவு செய்த வாலிபர், காதலியின் கண்முன்னே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இளம்பெண்ணின் தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.
கோவையில் நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட வருமாறு குடிபோதை யில் தொந்தரவு செய்த வாலிபர், காதலியின் கண்முன்னே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இளம்பெண்ணின் தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம்பெண்ணுடன் காதல்
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் பேசியும், அடிக்கடி சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
காதலுக்கு பெற்றோர் சம்மதம்
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆரம்பத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இளம்பெண்ணின் வற்புறுத்தலால் பெற்றோர் சம்மதித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர், பிரசாந்த் மற்றும் இளம்பெண்ணை அழைத்து பேசினர். அப்போது, "உங்களின் காதலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கொஞ்ச நாட்கள் சென்ற பின்னர் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம்" என்று அறிவுரை கூறினர்.
காதலியின் பிறந்தநாள்
இந்த நிலையில் பிரசாந்தின் காதலிக்கு நேற்று பிறந்தநாள் வந்தது. இந்த பிறந்தநாள் விழாவை நள்ளிரவில் கேக்வெட்டி கொண்டாட பிரசாந்த் முடிவு செய்தார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பிரசாந்த், தனது நண்பர்களான தரணிபிரசாத், குணசேகரன், அபிஷேக் ஆகியோருக்கு தனது காதலியின் பிறந்தநாளையொட்டி மதுவிருந்து கொடுத்தார்.
பின்னர் பிரசாந்த், தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கிக்கொண்டு, நண்பர்களோடு செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையில் உள்ள காதலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
சுவர் ஏறி குதித்தனர்
நள்ளிரவு நேரம் என்பதால் காதலியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் காதலியின் பெயரை சொல்லி, வெளியே வா பிறந்தநாள் கொண்டாடலாம் என்று கூச்சல் போட்டனர்.
ஆனால் யாரும் வெளியே வராததால் பிரசாந்த் உள்பட 4 பேரும் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். தொடர்ந்து வீட்டின் அலார மணியை அடித்துக்கொண்டே இருந்தனர்.
இதையடுத்து பெண்ணின் தந்தை மகாதேவன் மற்றும் தாய்மாமா விக்னேஷ் ஆகியோர் வெளியே வந்தனர். அவர்களிடம் தனது காதலியை பிறந்தநாள் கொண்டாட வெளியே வர செல்லுமாறு குடிபோதையில் பிரசாந்த் தகராறு செய்தார்.
வாலிபர் வெட்டிக்கொலை
அதற்கு அவர்கள், இப்போது வேண்டாம் நாளை காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி பிரசாந்தை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் பிரசாந்தும் அவரது நண்பர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, இளம்பெண்ணின் கண் முன்னே பிரசாந்தை சரமாரியாக வெட்டினார். அப்போது மகாதேவன் உடன் இருந்துள்ளார்.
அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மயங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தாய்மாமன் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கொலை செய்ததாக விக்னேஷை போலீசார் கைது செய்தனர். தந்தை மகாதேவனிடம் விசாரணை நடைபெறுகிறது.
பிரசாந்தும், அவரது காதலியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இது ஆணவக்கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் நள்ளிரவில் காதலியின் வீட்டிற்கு பிறந்த நாள் விழா கொண்டாட சென்ற வாலிபர், காதலியின் கண் முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.