வாகன சோதனையில் ஈடுபட்ட வாலிபருக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு?


வாகன சோதனையில் ஈடுபட்ட வாலிபருக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு?
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் போன்று உடை அணிந்து வாகன சோதனையில் ஈடுபட்ட வாலிபருக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

சப்-இன்ஸ்பெக்டர் போன்று உடை அணிந்து வாகன சோதனையில் ஈடுபட்ட வாலிபருக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் வேடம்

கோவை அருகே கருமத்தம்பட்டியில் உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபடுவதாக தகவல் பரவியது. உடனே அவரிடம், கருமத்தம்பட்டி போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். அதில் அவர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம்(வயது 39) என்பதும், சப்-இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும், அதுபோன்று சீருடை அணிந்து வாகன சோதனை என்ற பெயரில் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கருமத்தம்பட்டி அருகே தங்கி இருந்து அங்குள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருவதும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை மிரட்டுவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் போன்று வேடமிட்டு சுற்றியதும் தெரியவந்தது.

திருப்பூர், ஈரோட்டிலும்...

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கருமத்தம்பட்டி அருகே தெக்கலூர் பகுதியில் தங்கி இருந்து மில் வேலைக்கு சென்று வந்த விருதுநகர் மாவட்டம் திம்மன்பட்டி மள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வம், பல நாட்களாக சப்-இன்ஸ்பெக்டர் போன்று சீருடை அணிந்து மோட்டார் சைக்கிளில் சுற்றியுள்ளார்.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து இருக்கிறார். தெக்கலூரில் அவர் தங்கி இருக்கும் வீட்டில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில்தான் அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே செல்வது வழக்கம்.

மோசடி கும்பல்

மேலும் அந்தப்பகுதியிலேயே அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு பணமும் வசூலித்து இருக்கிறார். எனவே அவர் எத்தனை நாட்களாக இதுபோன்று பணம் வசூலித்து மோசடி செய்து உள்ளார்?, மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோன்று அவர் தனியாகத்தான் வாகன தணிக்கை செய்தாரா? அல்லது அவருடன் வேறு யாரும் சீருடை அணிந்து போலீஸ் போன்று நடித்து ஏமாற்றினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story