ஆடு, கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற வாலிபர் கைது


ஆடு, கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற வாலிபர் கைது
x

மோகனூரில் ஆடு, கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

மோகனூர்

ஆடு, கோழிகள் திருட்டு

மோகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அரூர் ஊராட்சி ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44). விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார்.

அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர். அதைக்கண்டு ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் ஓடி விட்டனர். அப்போது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில் எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரையாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி என்பவர் மகன் சக்திவேல் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர் ஆடு மற்றும் கோழிகளை திருடி வள்ளிபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் விற்பது தெரியவந்தது.

வாலிபர் கைது

இது குறித்து ரங்கசாமி மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மோகனூரில் ஆடு, கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.


Next Story