வாலிபர் எரித்துக் கொலை


வாலிபர் எரித்துக் கொலை
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் புறவழிச்சாலையில் முட்புதருக்குள் தென்காசியை சேர்ந்த வாலிபர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம்


சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் விழுப்புரம் புறவழிச்சாலை விராட்டிக்குப்பம் கணேஷ் நகர் பகுதியில் சாலையோரமாக ஒரு மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுடன் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர், அருகில் உள்ள முட்புதர் பகுதியில் இறங்கிப்பார்த்தனர். அப்போது அங்கு உடல் கருகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

தென்காசியை சேர்ந்தவர்

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் அருகில், அவர் கொண்டு வந்திருந்த பேக் மற்றும் காலி மதுபாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன. அந்த பேக்கை கைப்பற்றி சோதனை செய்ததில் அதற்குள் ஆதார் அட்டை, செல்போன், ரூ.150 உடன் மணிபர்ஸ் ஆகியவை இருந்தது.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா சோலைசேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஆபிரகாம் மகன் பெஞ்சமின் (வயது 28) என்பதும், இவர் சென்னை அண்ணா நகரில் தங்கியிருந்து ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

உயிரோடு எரித்துக்கொலை

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள புறவழிச்சாலையில் சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

பின்னர் பெஞ்சமினின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவரின் அருகில் இருந்து காலி மதுபாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதில் அதில் ஒரு பாட்டிலில் இருந்து பெட்ரோல் வாசம் வீசியது. இதனால் பெஞ்சமினை நேற்று முன்தினம் பகலில் யாரேனும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அவருக்கு மதுவாங்கி கொடுத்து போதை தலைக்கேறியதும் அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பரபரப்பு

பெஞ்சமின், சென்னையில் வேலை செய்து வந்ததால் அங்கிருந்து விழுப்புரம் வரை உணவு டெலிவரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பெஞ்சமினை அவரது நண்பர்கள் யாரேனும் விழுப்புரத்துக்கு திட்டமிட்டு அழைத்துவந்து எரித்துக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் புறவழிச்சாலையில் முட்புதருக்குள் வாலிபர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story