குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர்
பொள்ளாச்சியில் குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போலீசாருடன் தகராறு
பொள்ளாச்சி பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் வாலிபர் ஒருவர் மொபட்டில் நின்று பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை ஓரமாக நிற்குமாறு கூறினர். அதற்கு அந்த நபர், முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மொபட்டில் இருந்த சாவியை எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நபர், போலீசாருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் போலீசார் அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு கூறி விட்டு, மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ஆனாலும் விடாமல் அந்த நபர் தகாத வார்த்தையால் போலீசாரை வசைபாடினார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எச்சரித்து அனுப்பினர்
இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மோகன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அங்கு வந்த அவர், அந்த நபரை வேனில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜ்குமார் என்பதும், குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுபற்றி போக்குவரத்து போலீசார் கூறுகையில், போலீசாருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர் மாற்றுத்திறனாளி என்பதாலும், குடிபோதையில் இருந்ததாலும் இதுபோன்று மீண்டும் தகராறில் ஈடுபட கூடாது என்று கூறி எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார் என்றனர்.