அய்யலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வாலிபர் பலி
அய்யலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வாலிபர் பலியானார்.
அய்யலூர் அருகே உள்ள காக்காயன்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது 22). இவர் அய்யலூரில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். குப்பம்பட்டி அருகே உள்ள எல்லைக்காடு ரோடு வளைவில் எதிரே புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் (21), மீனாட்சிசுந்தரம் (18), திருப்பதி (21) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னையா, ஸ்டாலின், மீனாட்சிசுந்தரம், திருப்பதி ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சிசுந்தரம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.