போலீஸ் விசாரணைக்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு

ோலீஸ் விசாரணைக்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் பெலாகுப்பம் ரோடு கண்ணகி நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சூரியபிரகாஷ்(வயது 21). முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நிர்மல்ராஜ் (21). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் பாரதிதாசன்பேட்டை பொன்னியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முன்விரோதம் காரணமாக சவுந்தர் மகன் சூர்யா (19), ராமலிங்கம் மகன் லோகநாதன், துரை மகன் அய்யப்பன், தேவப்பன் மகன் பிரகாஷ் ஆகிய 4 பேரும் சூரியபிரகாஷ், நிர்மல்ராஜ் ஆகிய 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கையாளும், தடியாலும் தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு சூரியபிரகாஷ், நிர்மல்ராஜ் உள்பட 4 பேர் அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக ரோசனை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த போது, அதில் அய்யப்பன் தனது இடுப்பில் சிறிய கத்தியை மறைத்து வைத்திருந்தார். இதை பார்த்த போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.