தற்காலிக மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்


தற்காலிக மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
x

தற்காலிக மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்

தஞ்சாவூர்

தற்காலிக மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாநகராடசி கூட்டத்தில் கவுன்சிலர்் வலியுறுத்தினார்.

மாநகராட்சி கூட்டம்

தஞ்சை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் நேற்றுகாலை நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

மண்டலக்குழு தலைவர் புண்ணியமூர்த்தி: காவிரி சிறப்பு அங்காடி அருகே உள்ள மாலைநேர மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூல் செய்ய வேண்டும்.

மேயர் சண்.ராமநாதன்: விரைவில் ஏலம் விடப்படும்.

வடிகால் வசதியுடன் சாலை

வைஜெயந்திமாலா (மா.கம்யூ): பூக்கார விளார்சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சாக்கடை வடிகால் கட்டி, புதிய சாலை போட வேண்டும்.

ஆணையர் சரவணகுமார்: பூக்கார விளார்சாலை, பழைய மாரியம்மன்கோவில் சாலை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை வடிகால் வசதியுடன் போடப்படும்.

கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க) : பள்ளத்து தெருவில் மழைநீர் வடிய சிரமமாக இருக்கிறது. எனவே பாலத்தை மேம்படுத்தி தர வேண்டும். வீரவாண்டையார் தெருவில் புதிய சாலை போட வேண்டும்.

டாஸ்மாக் கடை

காந்திமதி (அ.தி.மு.க) : அடுத்தமாதம் (ஜூன்) 9-ந் தேதி 24 கருடசேவை விழா நடக்கிறது. விழாவில் மானம்புச்சாவடி பகுதியில் உள்ள 3 பெருமாள்கள் கீழவாசல், வெள்ளைப்பிள்ளையார்கோவில் ரவுண்டானா வழியாக தான் வருவார்கள். எனவே கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் இருந்து வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா வரை புதிதாக சாலை அமைத்து தர வேண்டும். தற்காலிக மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கீழஅலங்கத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்.

ஆணையர்: தற்காலிக மீன்மார்க்கெட் மாற்றப்படும்.

மேயர்: புதிதாக சாலை போட ரூ.18 கோடிக்கு டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 மாதத்தில் புதிய சாலை போடும் பணி தொடங்கப்படும்.

வெங்கடேஷ் (தி.மு.க) : மீன்களை ஏற்றி வரும் லாரிகளில் இருந்து வடியும் கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்கிறது. பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

மீன்மார்க்கெட்

மேயர்: ரூ.20 கோடியில் மீன்மார்க்கெட் கட்ட கோரிக்கை வைத்து இருக்கிறோம். இன்னும் 6 மாதத்திற்குள் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன்: பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முதலில் ரூ.300-ம், அடுத்ததாக பிரதிகள் பெற வேண்டும் என்றால் ரூ.200 கொடுக்க வேண்டியது உள்ளது. இந்த சான்றிதழை இலவசமாக கொடுக்கலாம்.

ஆணையர்: கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பிறப்பு சான்றிதழை இலவசமாக கொடுக்கலாம்.

துணை மேயர் அஞ்சுகம்பூபதி: மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும். நிலஅளவையர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கோபால் (அ.தி.மு.க) : சந்து பகுதியில் உள்ள வீடுகளுக்கு முறையாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படவில்லை.

ஆணையர்: விடுப்பட்ட பகுதிகளுக்கு இணைப்பு கொடுக்கப்படும்.

மேற்கண்டவாறு கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்


Next Story