தனியார் தொழிற்சாலையில் சுவரில் துளையிட்டு ரூ.15 லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


தனியார் தொழிற்சாலையில் சுவரில் துளையிட்டு ரூ.15 லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x

தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் சுவரில் துளையிட்டு ரூ.15 லட்சம் இரும்பு பொருட்களை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு மேம்பால பணிகளுக்கான கட்டுமானத்தின் போது அவற்றை இணைக்கும் உயர்தர இரும்பு பிளேட்டுகளான பொருள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழிற்சாலையின் பக்கவாட்டு மதில் சுவர் மீது ஏறி குதித்து மர்ம கும்பல் ஒன்று உள்ளே புகுந்தனர். அங்கு சுமார் 12 டன் எடை கொண்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள உயர்தர இரும்பு பிளேட்டுகளை திருடிய பின்னர், மதில் சுவரை துளையிட்டு அதன் வழியாக திருடிச்சென்றதாக தெரிகிறது.

இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் திருடபட்ட இரும்பு பொருட்களை வாகனத்தின் மூலம் அங்கிருந்து கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சியின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகிறது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 36) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருட்களை சரி பார்த்தார். அப்போது அந்த தொழிற்சாலையில் இருந்த தாமிர கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் என ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது சம்பந்தமாக சந்தோஷ் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து தனியார் தொழிற்சாலையில் தடவாளப்பொருட்களை திருடிய மர்ம நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.


Next Story