திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்


திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் மழை நீடிப்பால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

குமரியில் மழை நீடிப்பால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

மழை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று முன்தினமும் பல இடங்களில் மழை பெய்தது. மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 4.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல பேச்சிப்பாறை-2.4, பெருஞ்சாணி-2.8, மாம்பழத்துறையாறு-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை நிலவரம்

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதிலும் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந் தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வருகிறது. மேலும் நாகர்கோவில் மாநகர் குடிநீருக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.50 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 41.10 அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 8.82 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 8.92 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 13.30 அடியாகவும் உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வருவதால் சுமார் 200 குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சில குளங்கள் பாதி அளவு நிரம்பு உள்ளன. சில குளங்களில் குறைந்த அளவில் தண்ணீர் கிடக்கிறது.

திற்பரப்பு

மலையோர பகுதியில் பெய்யும் மழையால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் திற்பரப்பில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போதிய பணியாட்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். எனவே, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகமும், போலீசாரும் இணைந்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story