சுற்றுலா பஸ் பழுதடைந்தது; 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


சுற்றுலா பஸ் பழுதடைந்தது; 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கேரள சுற்றுலா பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றதால், 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கேரள சுற்றுலா பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றதால், 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழுதடைந்த பஸ்

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இருந்து கூடலூருக்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளது. 3 மாநிலங்களை இணைக்கும் மையமாக கூடலூர் உள்ளதால் வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று ஓணம் பண்டிகை என்பதால் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் கேரள பதிவு எண் கொண்ட சுற்றுலா பஸ், காலை 9.15 மணிக்கு பயணிகளுடன் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது நடுகூடலூர் பகுதியில் வந்த போது, திடீரென சுற்றுலா பஸ் பழுதடைந்து தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் நின்றது. சாலையின் ஒருபுறம் மண்மேடும், மறுபுறம் போதிய சமதளம் இல்லாததால் சிறிய ரக வாகனங்கள் கூட செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நின்றன. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனிடையே சுற்றுலா பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் உடனடியாக சீரமைக்க முடியவில்லை.இதைத்தொடர்ந்து ஒர்க் ஷாப் பணியாளர்கள் சிலரை போலீசார் வரவழைத்து பழுதை சரிபார்த்தனர். அதன் பின்னர் சுற்றுலா பஸ் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. 1½ மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் வெளியூர் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் தாமதமாக தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.


Related Tags :
Next Story