மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்
மணல்மேடு அருகே மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்; தப்பியோடிய 2 பேருக்கு வலைவீச்சு
மணல்மேடு:
மணல்மேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிச்சி கிராமத்தில் டிராக்டரில் மணல் திருடி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது குறிச்சி தெற்கு தெருவில் டிப்பருடன் சென்ற டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார், டிராக்டரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஒருவர் மணல்மேடு அருகே புலவனூர் காந்தி தெருவை சேர்ந்த ஹரி என்கிற ஹரிஹரன் என்பது தெரியவந்தது. மற்றொருவரை விசாரிப்பதற்குள், அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.