கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரி, 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
கோத்தகிரி அருகே கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லாரி கவிழ்ந்தது
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு விளைநிலங்களை எரு இட்டு பண்படுத்துவதற்காக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோழிக்கழிவு எரு லாரிகளில் கொண்டு வருவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று கோத்தகிரி வழியாக இடுஹட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.
லாரியை இடுஹட்டி பாரதி நகர் ஊனமுற்றோர் காலனியை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் விஜய் (வயது 32) ஓட்டினார். நேற்று அதிகாலை 2 மணியளவில் அரவேனு அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
டிரைவர் உயிர் தப்பினார்
இந்த விபத்தில் விஜய் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் டிரைவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் லாரியில் கொண்டு சென்ற கோழிக்கழிவுகள் கீழே கொட்டி வீணானது. பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.