அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்களை சரியாக நிர்வகிக்க வேண்டும்


அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்களை சரியாக நிர்வகிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 July 2023 8:40 PM GMT (Updated: 20 July 2023 10:58 AM GMT)

அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்களை சரியாக நிர்வகிக்க வேண்டும்

தஞ்சாவூர்

அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் ெசாத்துக்களை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.

பேட்டி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்களை புதுப்பிக்கவும், புனரமைக்கவும், பாதுகாக்கவும், திருப்பணி செய்யவும் கோவில் சொத்துக்கள் மூலமும், பல்வேறு வரவினங்கள் மூலவும் கோவில்களில் கோடிக்கணக்கான ரூபாய் சேமிப்பாக உள்ளது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு புராதான கோவில்களை பாதுகாப்பது கோவில்களின் கடமை.

தமிழக அரசின் அறநிலையத்துறை புனரமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இந்த தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா? என அரசு கண்காணிப்பதில்லை.

சொத்துக்களை சரியாக நிர்வகி்க்க வேண்டும்

அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்களை சரியாக நிர்வகிக்க வேண்டும். இந்தத்துறையை பற்றி தெரியாதவர்களே அறநிலையத்துறையின் உயர் பதவிக்கு வந்துவிடுகிறார்கள்.

கோவில்களை பணரீதியாக வகைப்படுத்துவதையும், வருமானத்தின் அடிப்படையில் கோவில்களை பிரிப்பதையும் அரசு கைவிட வேண்டும். இது ஒரு அபாயகரமான செயல்.

1959-ல் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் கோவில் நிர்வாகத்தை சர்வாதிகாரம் அடிப்படையில் நடத்துவதாக அமைந்துள்ளது. உரிமையாளரையே பணியாளராக ஆக்கியுள்ளது. கோவில்களை வகைப்படுத்துவதாக இருந்தால் தொன்மை அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். இதற்கு நம்மிடம் வரலாறு உள்ளது.

குடமுழுக்கு நடத்த வேண்டும்

சேர, சோழ, பாண்டியர்கள் காலம் விஜயநகர பேரரசு காலம், இயேசு கிறிஸ்து காலம், அதற்கு முந்தைய காலம் என வயதின் அடிப்படையில் கோவில்களை வகைப்படுத்தி எந்த கோவில் பழமையானதோ அதை முதலில் புதுப்பித்து குடமுழுக்கு செய்ய வேண்டும். அதற்கு அடுத்து படிப்படியாக வயதின் அடிப்படையில் கோவில்களை புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் படிப்படியாக 10, 20 ஆண்டுகளில் எல்லா கோவில்களையும் புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த முடியும்.

தற்போது பணத்துக்காகவும், ஊழல் செய்யவும் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து வருமானத்தை பெருக்குவதையே குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் கோவில்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story