வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்
வேன் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனர்.
மணிகண்டம்:
வேன் கவிழ்ந்தது
துவரங்குறிச்சியை சேர்ந்தவர் சபீனா (வயது 30). இவர், திருச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, உறவினர்கள், நண்பர்கள் உள்பட 15 பேருடன் ஒரு வேனில் துவரங்குறிச்சி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். வேனை டிரைவர் சாதிக்பாட்ஷா (39) ஓட்டினார். மணிகண்டத்தை அடுத்த சேதுராபட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது மழை பெய்த நிலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் உதவியுடன் வேனில் இருந்தவர்களை கண்ணாடியை உடைத்து மீட்டனர். இந்த விபத்தில் சபீனா, சுபிராபேகம், ஜமீமா, நிர்மலா, ஐஸ்வர்யா, மூர்த்தி, ஜெயபாலன், காந்திராஜ், பவுசானா, கிருஷ்ணன், ஆறுமுகம் அகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
3 பேர் காயம்
*சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி ஒரு கார் சென்றது. திருச்சி மாவட்டம், கல்பட்டி அருகே புத்தானத்தம் பிரிவு சாலை என்ற இடத்தில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி(36), மகேஷ்(34), மணிகண்டன்(34), ராஜேஷ்(34) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
*உப்பிலியபுரத்தை அடுத்த வெங்கடாசலபுரம் கரட்டடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தா(வயது 58). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாத்திரை வாங்க சென்றார். அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
*குழுமணி அருகே உள்ள பேரூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜோதிவேல்(54) தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தொங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபோது, அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.