வெள்ளலூர் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது


வெள்ளலூர் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
x

வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலை தரைப்பாலம் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலை தரைப்பாலம் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது‌. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சித்திரை சாவடி அணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் வெள்ளலூர் - சிங்கா நல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழை வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம்.

தற்காலிக தரைப்பாலம்

எனவே அங்கு நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ளலூர் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டது. எனவே வாகன ஓட்டிகள் 8 கிலோ மீட்டர் சுற்றி மாநகர பகுதிகளுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. வெள்ளநீர் கரை புரண்டு ஓடியது. இதில் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மாற்றுப் பாதையான ஒண்டிப்புதூர்- பட்டணம் சாலையில் உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நொய்யல ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story