பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட கிராம நிர்வாக அலுவலர் மயக்கம்
பெரம்பலூரில் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட கிராம நிர்வாக அலுவலர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து உணவகத்தை 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர் மயக்கம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உணவகம் உள்ளது. இதனை கூடலூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி சார் பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் ஆலம்பாடியை சேர்ந்த தற்போது கல்பாடி தெற்கு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணவேணி (வயது 40) உள்பட 46 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவருக்கும் உணவகத்தில் மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. மதிய உணவினை அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கிருஷ்ணவேணி தனது தட்டில் பல்லி இறந்து கிடந்துள்ளதை பார்த்துள்ளார். இதனால் அவருக்கு தலைச்சுற்றலும், லேசான மயக்கமும் ஏற்பட்டது.
உணவகத்தை 3 நாட்கள் மூட உத்தரவு
இதனைத் தொடர்ந்து அவர் சாப்பிடுவதை அப்படியே நிறுத்திவிட்டு, தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். மேலும் பிறருக்கு உணவு பரிமாறுவதும் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு கிருஷ்ணவேணியை பாலக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைக்கு சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அதன் பிறகு பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக உணவு சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சின்னமுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாப்பாட்டினை மாதிரி ஆய்வுக்கு எடுத்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பினார். உணவகத்தை 3 நாட்கள் மூடி சுத்தம் செய்து சுவர்களில் வர்ணம் பூசுமாறு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தி சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக கிராம நிர்வாக அலுவலர்கள் இடையே சிறிது அச்சமும், பதற்றமும் ஏற்பட்டது.