அதிகாரிகளை கிராமத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்


அதிகாரிகளை கிராமத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:47 PM GMT)

திண்டிவனம் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்துக்குள் விடாமல் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

பிரம்மதேசம்:

திண்டிவனம் அடுத்த கிளியனூர் அருகே உள்ள புதுக்குப்பம் ஊராட்சிக்குட்பட்டது எடச்சேரி கிராமம். இந்த கிராம மக்கள், போதிய குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பழுப்பு நிறத்தில் தண்ணீர் வருகிறது. இதை குடித்தால் நோய் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் கிராம மக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர். அங்கேயே இரவு உணவை சமைத்து சாப்பிட்டனர்.

பேச்சுவார்த்தை

இவர்களிடம் வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷா முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு எடச்சேரி கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷா முரளி, தாசில்தார் கோவர்தன், செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், மண்டல துணை தாசில்தார் அருண்மொழி மற்றும் அதிகாரிகள் எடச்சேரிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், புதுக்குப்பத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து எடச்சேரி கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதிகாரிகளை தடுத்த கிராம மக்கள்

இதைத் தொடர்ந்து புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக அதிகாரிகள், புதுக்குப்பத்துக்கு சென்றனர். இதனிடையே இது பற்றி அறிந்ததும் புதுக்குப்பம் எல்லையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு, அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்தனர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் பக்கத்து ஊருக்கு குடிநீர் எடுத்து செல்லக்கூடாது என்றும், எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் என்றும், எனவே இந்த திட்டத்தை கைவிடுமாறும் கூறினர். அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும், கிராம மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யாமலேயே அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story