சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்


சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்
x

சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக வீரர்கள் அடக்கினர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் ஊரின் நடுவில் வாடிவாசல் அமைக்கப்பட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை தாசில்தார் குமரய்யா தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு குழுவாக களமிறங்கினர்.

பரிசுகள்

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் திமிலை பிடித்து அடக்கப்பட்டன. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு அண்டா, குக்கர், சைக்கிள், அலங்கார மேஜை, தங்கக்காசு, வெள்ளிக்காசு மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

சில காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் மாட்டை பிடித்தால் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் ஆகியவற்றை பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். அப்படி அறிவிக்கப்பட்ட மாடுகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட பரிசுகள் மட்டுமின்றி மாட்டின் உரிமையாளர் அறிவித்த பரிசுகளும் வழங்கப்பட்டன.

32 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் மொத்தம் 668 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 340 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்பட்டது. காளைகள் முட்டியதில் மொத்தம் 32 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சேலம் மாவட்டம் தடாவூர் கிராமத்தை சேர்ந்த ராஜாவின் மகன் சண்முகம்(வயது 21), புள்ளம்பாடியை சேர்ந்த மணிராஜின் மகன் மகேஷ்(32), புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அடைக்கலம்(40), சுந்தரத்தின் மகன் ராஜா(25) உள்ளிட்ட 7 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காலை 8 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி அளவில் நிறைவடைந்தது.

ஜல்லிக்கட்டையொட்டி துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.


Next Story